Unicamp Preloader

News & Events

Thiruvalluvar Thiruvila

MK103209
Events

Thiruvalluvar Thiruvila

ஒன்றரை வரிகளில் உலகாண்ட திருவள்ளுவருக்கு ஒன்றரை நாட்கள் இலக்கிய விழா !
இ-பாக்ஸ் ஏற்பாட்டில் இலக்கிய கொண்டாட்டம்

இ-பாக்ஸ் கல்லூரிகள், இ-பாக்ஸ் பள்ளிகள், கதிர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஒன்றரை நாட்கள் கொண்டாட்டமாக திருவள்ளுவர் விழா கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெற்றது

தொடக்க விழாவிற்கு கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை தாங்கினார். ஆம்பிசாஃப்ட் நிறுவனங்களின் தோற்றனர் திருமதி புனிதா பிரதீப் வரவேற்புரை நிகழ்த்த, முதன்மை கற்றல் அலுவலர் முனைவர் பாலமுருகன் இ-பாக்ஸ் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.

டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் தன் தலைமை உரையில் தொழில் நுட்பத்தின் உச்சம் தொட்டவர்கள் விழுமங்கள் மற்றும் வாழ்க்கை நெறிகளின் ஆழம் தொடுவதன் அவசியம் குறித்து விளக்கி அதனை இ-பாக்ஸ் குழுவினர் திறம்பட செய்வதை பாராட்டினார். “இ-பாக்ஸ் என்னும் பெயரை விட அவுட் ஆஃப் தி பாக்ஸ் என்னும் பெயர் இவர்களின் தனித்துவமிக்க சிந்தனைகளுக்கு மேலும் பொருத்தம்” என்றார் அவர்.

மருத்துவர் நளினி அவர்கள் திருக்குறள் காமத்துப்பால் எழுதிய கவி உரை நூலினை திரு. வானவராயர் வெளியிட முதல் படியினை ஆடிட்டர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து முனைவர் த.ராஜாராம் மற்றும் திரு.ராஜேந்திரன் (IRS) ஆகியோர் திருக்குறளின் காலத்தை வென்ற நிலைப்பாடு குறித்து விரிவுரைகள் நிகழ்த்தினர்.

28 பிப்ரவரி 2021 காலை “பாலும் தெளிதேனும்” எனும் தலைப்பில் வித்தியாசமான அமர்வு நிகழ்ந்தது. படைப்பாளர்களின் எழுத்துக்களில் திருக்குறளின் தாக்கம் பற்றிய இந்த ஊரை அரங்கிற்கு திரு.இயகோகா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். “படைப்பு மனம் சில நெறிகளை அழுத்தமாக தம் எழுத்துக்களில் பதிவு செய்ய திருக்குறள் உள்ளிட்ட அறநூல்களில் நல்ல வாசிப்பு இருக்க வேண்டும் என்றார் அவர்.

பாரதியார் எழுத்துக்களில் முப்பால் எனும் தலைப்பில் முனைவர் குரு. ஞானாம்பிகா, கல்கி எழுத்துக்களில் முப்பால் எனும் தலைப்பில் முனைவர் அரசு பரமேஸ்வரன், ஜெயகாந்தன் எழுத்துக்களில் முப்பால் எனும் தலைப்பில் திரு.சுகா ஆகியோர் உரைகள்  நிகழ்த்தினர்.

திருவள்ளுவர் விழாவையொட்டி நிகழ்ந்த பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலை 4:15 அளவில் நவீனத் தமிழில் திருக்குறள் எனும் அமர்வு நிகழ்ந்தது. கவிஞர் சக்திஜோதி நெறியுரை ஆற்றினார். குரளுக்கு உரை எழுதிய அனுபவம் குறித்து கவிஞர் மகுடேஸ்வரன் மற்றும் மருத்துவர் நளினி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் திருக்குறள் கருத்துக்களை தன்னகத்தே பெரிதும் கொண்டிருப்பது கம்பராமாயணமா ? வில்லிபாரதமா எனும் தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது.

கம்பராமாயணமே என்னும் அணியில் மரபின் மைந்தன் முத்தையா, முனைவர் இளங்கோவன், முனைவர் விவேக் பிரபு ஆகியோரும் வில்லிபாரதமே என்னும் அணியில் கவிஞர் உமாமகேஸ்வரி, திருமதி மகேஸ்வரி சற்குரு, திருமதி கனக தூரிகா ஆகியோரும் வாதிட்டனர்.

நிறைவில் நடுவர் திரு.சுகிசிவம் திருக்குறள் கருத்துக்களைப் பெரிதும் தன்னகத்தே கொண்டிருப்பது கம்பராமாயணமே என்று தீர்ப்பளித்தார்.

இ-பாக்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர், முதல்வர்கள், ஆசிரியப் பெருமக்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என்று பலரும் முன்நின்று முழு உழைப்பைத் தந்து நிறைவான இந்த விழாவை திறம்பட நிகழ்த்திக் காட்டினர்.

விழாவில் செல்வி க.மகில்மலரின் திருக்குறள் இசை மற்றும் தமிழிசைப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன.

இருநாள் நிகழ்வுகளையும் கவிஞர் நா. சியாமளா தொகுத்து வழங்கினார்.

Donation Helps Us

$100
million goal